கொழும்பு: இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே தெற்கு கடற்பரப்பில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ் டேனா’ (IRIS Dena) கப்பலிலிருந்து இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
தாக்குதல் மற்றும் கப்பலின் பின்னணி: இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பு மற்றும் இராணுவப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்தக் கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 180 மாலுமிகள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலர் உறுதிப்படுத்தல்: இந்தியப் பெருங்கடலில் சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரானியப் போர்க்கப்பல் ஒன்றை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) நேற்றைய தினம் உறுதிப்படுத்தினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டார்பிடோ (Torpedo) மூலம் எதிரிக் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும் என அவர் சுட்டிக்காட்டினார். “அமைதியான மரணம்” (Quiet Death) என இந்தத் தாக்குதலைக் குறிப்பிட்ட அவர், போரில் வெற்றி பெறுவதற்காகவே தாங்கள் போரிடுவதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையின் மீட்புப் பணி: நேற்று அதிகாலை ஈரானிய கடற்படைக் கப்பலான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து வந்த அவசர உதவி அழைப்பையடுத்து, இலங்கை கடற்படையினர் 32 பேரை உயிருடன் மீட்டனர். அவர்கள் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (04) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத், உயிர்களைக் காப்பாற்றுவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார். கப்பலின் ஆவணங்களின்படி 180 பேர் அதில் இருந்ததாக நம்பப்பட்டாலும், காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீட்புப் பணிகளை ஆரம்பித்த போது கப்பல் தென்படவில்லை எனவும், கடலில் எண்ணெய் படிவுகளும் மிதக்கும் உயிர்காப்புப் படகுகளுமே காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
