பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது மணிலாவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சு காண்டாவை (Masato Kanda) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த இருதரப்பு சந்திப்பில், இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான வலுவான பங்களிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சி முயற்சிகளைத் தலைவர் காண்டா பாராட்டினார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நாட்டின் மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கும் முக்கிய துறைகளில் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு அளிக்கும் திட்டங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மணிலா விஜயத்தின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் (தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியா) யிங்மிங் யாங்கையும் (Yingming Yang) பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அவர்கள் மதிப்பாய்வு செய்தனர். அத்துடன், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அவர்கள் ஆராய்ந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
