கொழும்பு: ஜே.வி.பி (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான அக்கட்சியின் உயர்மட்டக் குழுவினர் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர்கள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கேரள முதலமைச்சருடன் சந்திப்பு: கடந்த புதன்கிழமை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்த ஜே.வி.பி குழுவினர், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் கலாசாரத் தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடினர். இது குறித்து இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ‘X’ பதிவில், “ஜே.வி.பி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் தூதுக்குழுவினர் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தனர். சுற்றுலா மற்றும் கலாசார இணைப்பை அதிகரிப்பதில் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் (ISRO) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் விழிஞ்சம் துறைமுகம் (Vizhinjam Port) ஆகியவற்றுக்கும் இக்குழுவினர் விஜயம் செய்தனர். இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ‘நீலப் பொருளாதாரம்’ (Blue Economy) தொடர்பான கள அனுபவங்களை இதன்போது அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
குஜராத் முதலமைச்சருடன் சந்திப்பு: முன்னதாக, காந்திநகரில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலைச் சந்தித்த தூதுக்குழுவினர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை புதுப்பிப்பது குறித்துப் பேசினர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா-இலங்கை உறவுகள் பலமடைந்துள்ளதாக குஜராத் முதல்வர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
குஜராத் ஒரு கொள்கை சார்ந்த மாநிலம் எனவும், அங்குள்ள பல்வேறு துறைசார் கொள்கைகள் இலங்கைக்குப் பயனளிக்கும் எனவும் ரில்வின் சில்வா இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும், குஜராத் மக்களிடையே இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளில் இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
