கான்பெர்ரா, டிசம்பர் 12: உலகப் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ள ஒரு வரலாற்று நடவடிக்கையாக, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் உத்தியோகபூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், சமூக ஊடகங்களுக்கு வயது வரம்பை நிர்ணயித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெறுகிறது.
தடை செய்யப்பட்ட செயலிகள் எவை? நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள இந்தத் தடையின் காரணமாக, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் பின்வரும் தளங்களில் கணக்கு வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது:
- ஃபேஸ்புக் (Facebook)
- இன்ஸ்டாகிராம் (Instagram)
- டிக்டாக் (TikTok)
- எக்ஸ் (X – ட்விட்டர்)
- யூடியூப் (YouTube)
- ஸ்னாப்சாட் (Snapchat)
- ரெட்டிட் (Reddit)
- த்ரெட்ஸ் (Threads)
விதிவிலக்கு அளிக்கப்பட்டவை: கல்வி மற்றும் அத்தியாவசியத் தொடர்புகளுக்காகச் சில செயலிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் வாட்ஸ்அப் (WhatsApp), மெசஞ்சர் (Messenger), யூடியூப் கிட்ஸ் (YouTube Kids), கூகுள் வகுப்பறை (Google Classroom) மற்றும் கேமிங் தளங்களான ரோப்லாக்ஸ் (Roblox) ஆகியவை அடங்கும்.
தண்டனை யாருக்கு?
- சிறுவர்களுக்கு இல்லை: தடையை மீறி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறுவர்களுக்கோ அல்லது அவர்களின் பெற்றோருக்கோ எந்தவித அபராதமும் அல்லது தண்டனையும் விதிக்கப்படாது.
- நிறுவனங்களுக்கே அபராதம்: சிறுவர்கள் கணக்குத் தொடங்குவதைத் தடுக்கத் தவறும் அல்லது உரிய வயது சரிபார்ப்பு முறைகளைப் பின்பற்றாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 49.5 மில்லியன் அவுஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 33 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வரை அபராதம் விதிக்கப்படும்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு: “சிறுவர்கள் இந்தத் தடையை மீற முயற்சிப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களைத் தடுத்துப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் சமூக ஊடக நிறுவனங்களுக்கே உரியது,” எனத் தொடர்புத்துறை அமைச்சர் அனிகா வெல்ஸ் (Anika Wells) தெரிவித்துள்ளார்.
16 வயதுக்குட்பட்டவர்களின் தற்போதைய கணக்குகள் அந்தந்த தளங்களால் முடக்கப்படும் (Deactivated) அல்லது நீக்கப்படும் (Deleted) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
