Headlines

ஐபிஎல் 2026: கவுகாத்தியில் வானவேடிக்கை காட்டிய ராஜஸ்தான்! மும்பைக்கு அதிர்ச்சி தோல்வி!

கவுகாத்தியில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது. மழையின் குறுக்கீட்டால் இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், ராஜஸ்தான் வீரர்களின் அதிரடி பேட்டிங்கும், துல்லியமான பந்துவீச்சும் மும்பைக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.

போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஈரமான ஆடுகளத்தை சாதகமாகப் பயன்படுத்தலாம் என்ற வியூகத்தில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், ராஜஸ்தான் ஓப்பனர்கள் மும்பையின் கணக்கை சுக்குநூறாக்கினர்.

வைபவ், ஜெய்ஸ்வாலின் சரவெடி பேட்டிங்! துவக்க வீரர்களாக களமிறங்கிய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். வைபவ் சூர்யவன்ஷி வெறும் 14 பந்துகளில் 5 பிரம்மாண்ட சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் விளாசி ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஆட்டத்தின் நாயகனாக உருவெடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். வெறும் 32 பந்துகளில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்து அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இவர்களின் வாணவேடிக்கையால் ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.

மும்பையின் ஏமாற்றமளிக்கும் சரிவு 151 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ரிக்லெடன் (8) வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் சிக்சர் அடித்தாலும், உடனடியாக நண்ட்ரே பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சந்தீப் சர்மா வீசிய பந்தில் ரோஹித் ஷர்மா எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்; சந்தீப் சர்மாவிடம் ரோஹித் தனது விக்கெட்டை இழப்பது இது ஆறாவது முறையாகும்.

2.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எனத் தடுமாறிய மும்பையை மீட்க கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், திலக் வர்மாவும் முயன்றனர். ஆனால், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் பாண்டியா (9) ஆட்டமிழக்க, சிறிது நேரத்திலேயே திலக் வர்மாவும் வெளியேறினார். 5 ஓவர்களிலேயே மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களுடன் தத்தளித்தது.

ரதர்ஃபோர்ட் மற்றும் நமன் தீர் (25) ஆகியோர் சற்று போராடி சிக்ஸர்களைப் பறக்கவிட்டாலும், இலக்கு வெகு தொலைவில் இருந்தது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை அதிகரித்தனர். இறுதியில் மும்பை அணி 11 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் முழு ஆதிக்கம் செலுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த வெற்றியை கம்பீரமாகப் பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *