சென்னை: பிரம்மாண்டமான தொடக்க வசூலைப் பெற்ற ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம், வார நாட்களில் வசூலில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று (19), செவ்வாய்க்கிழமை, படத்தின் ஆறாவது நாள் இந்திய வசூல் ஒற்றை இலக்கமான ₹9.50 கோடியாகக் குறைந்துள்ளதாக Sacnilk தளம் தெரிவித்துள்ளது.
படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, முதல் நான்கு நாட்களில் உலகளவில் ₹404 கோடியை இப்படம் வசூலித்திருந்தது. ஆனால், ஐந்தாம் நாளான திங்கட்கிழமை ₹12 கோடியாகக் குறைந்த வசூல், ஆறாம் நாளில் மேலும் சரிந்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் மட்டும் ஆறு நாட்களில் இப்படம் ₹216 கோடியை வசூலித்துள்ளது.
சுமார் ₹600 கோடி செலவில் உருவானதாகக் கூறப்படும் இப்படத்திற்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. படத்தின் கதை விமர்சிக்கப்பட்டாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அனிருத்தின் இசை படத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளதாகப் பாராட்டுகளும் கிடைத்துள்ளன.
வார இறுதி விடுமுறைகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த வசூல் சரிவு, படத்தின் நீண்டகால வெற்றி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.