செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொடர்பான பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்துகொள்ளவும், இதில் யாரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்யவும், நெறிமுறைக் கொள்கைகளின் அடிப்படையில் பரஸ்பர கற்றல் மூலம் கூட்டாக முன்னேறவும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI இம்பாக்ட் 2026’ (AI Impact 2026) உச்சிமாநாட்டின் தலைவர்கள் அமர்வில் இன்று (19) வியாழக்கிழமை உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கையின் தொலைநோக்குப் பார்வையானது தனிமைப்படுத்தப்பட்ட வெற்றி அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, AI உட்கட்டமைப்பை பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாக இலங்கை கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
அதற்கமைய, நான்கு முக்கியத் தூண்களின் அடிப்படையில் பிராந்திய ஒத்துழைப்பை அவர் முன்மொழிந்தார்:
- கட்டுப்படியாகக்கூடிய அணுகல் (Affordable access).
- மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மொழித் தரவுத்தொகுப்புகள் (Centrally governed language datasets).
- பொதுவான மதிப்பீட்டு வழிமுறைகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள்.
- ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு.
மனித குலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த ‘AI இம்பாக்ட் 2026’ உச்சிமாநாட்டின் தலைவர்கள் அமர்வு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.
இதில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே உள்ளிட்ட பல அரச தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
உச்சிமாநாட்டின் இடையே, அரச தலைவர்கள் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டனர். பின்னர் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களும் பிரதிநிதிகளும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தலைவர்கள் அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்:
“செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரங்கள், ஆட்சி அமைப்புகள் மற்றும் சமூகங்களை மாற்றிவரும் இந்தத் தீர்க்கமான தருணத்தில் புதுடெல்லியில் உங்களுடன் இணைவது பெரும் பெருமையளிக்கிறது. முந்தைய நூற்றாண்டுகளில் தொழில்மயமாக்கல் ஏற்படுத்தியதைப் போலவே, தேசிய அபிவிருத்திப் பாதைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாற்றும் சக்தியாக AI உள்ளது.
எவ்வாறாயினும், AI திறன் கொண்ட நாடுகளுக்கும், அத்தகைய திறன்கள் இல்லாத நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவது டிஜிட்டல் பொருளாதாரத்தில் பிளவை ஏற்படுத்தும் கடுமையான அபாயத்தைக் கொண்டுள்ளது. பின்தங்கிய நாடுகள் உலகளாவிய வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளிலிருந்து மேலும் ஓரங்கட்டப்படலாம், இதனால் நாம் அடைய விரும்பும் அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் பாதிக்கப்படலாம்.
பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலவே, இலங்கையும் AI இன் முழுத் திறனைப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பை இன்னும் முழுமையாக நிறுவவில்லை. எனவே, நாம் தெளிவான நோக்கத்துடனும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய ஒரு தீர்க்கமான தருணம் இதுவாகும்.
இலங்கையில் தொழில்நுட்பத் திறன் கொண்ட இளம் மனிதவளத் தளம் உள்ளது. வலுவான சட்டக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுடன் இணைந்த பொருளாதார கலாசாரமும் எங்களிடம் உள்ளது. தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த சட்டக் கட்டமைப்புகளை நாங்கள் புதுப்பித்து வருகிறோம், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்கிறோம், மேலும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் பொது நம்பிக்கையைப் பாதுகாக்கும் நிறுவனங்களை பலப்படுத்தி வருகிறோம்.
பூகோள ரீதியில், AI தொடர்பான அபிலாஷைகள், உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயினும், கலாசார இணக்கம் (cultural alignment) என்ற ஒரு முக்கியமான பரிமாணம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தத் தொழில்நுட்பங்கள் மனித குலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேலும் மேம்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டும். உலகளாவிய AI அமைப்புகள் சில மொழிகள் மற்றும் கண்ணோட்டங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டால், எமது தனித்துவமான கலாசாரப் பன்முகத்தன்மை சிதைவடையும் அபாயம் உள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, மொழி மற்றும் கலாசாரம் பெருமைக்குரிய விடயங்கள் மட்டுமல்ல, நம்பிக்கையின் அடித்தளமும் ஆகும். அத்தகைய கலாசார இணக்கத்தை அடைவதற்கு பரந்த உள்ளடக்கமும் பாதுகாப்பும் தேவை. எமது உள்ளூர் மொழிகள் மற்றும் கலாசார அறிவு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு AI அமைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அதிகபட்ச கவனம் செலுத்தப்பட வேண்டும், AI இன் சாத்தியமான பாதகமான தாக்கங்களிலிருந்து எமது கலாசார விழுமியங்களைப் பாதுகாக்க வழிமுறைகள் நிறுவப்பட வேண்டும்.
எமது பார்வை தனிமைப்படுத்தப்பட்ட சாதனை அல்ல, ஒருங்கிணைந்ததாகும். AI உட்கட்டமைப்பை பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாக நாங்கள் கருதுகிறோம். அதற்கமைய, இலங்கை நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் பிராந்திய ஒத்துழைப்பை முன்மொழிகிறது: கட்டுப்படியாகக்கூடிய அணுகல், மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மொழித் தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள், அத்துடன் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு.
இந்த முயற்சியின் மூலம், AI இன் பலன்களை அனைவரும் பரவலாகவும் சமமாகவும் பெற முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தச் சூழலில், தேசிய மற்றும் பிராந்தியத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய AI திறன்களுடன் கூடிய தரவு உட்கட்டமைப்பை (data infrastructure) உருவாக்குவது குறித்து இலங்கை ஆராய்ந்து வருகிறது.
டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திறன்களில் உலகளாவிய தலைவர்களாக உருவாகி வரும் இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம், நிலையான, பாதுகாப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான பிராந்திய AI தரவு மையத் திறன்களை நிறுவுவதற்கு இலங்கைக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது.
எந்தவொரு நாடும் தனியாக AI-தயாரான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பது எமது புரிதல். எனவே, புதுடெல்லியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டுப் பிரகடனம், உலகின் மற்றும் பிராந்தியத்தின் பல நாடுகளின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதோடு, இத்தகைய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது ஊக்கமளிக்கிறது.
எனவே, செயற்கை நுண்ணறிவு குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்துகொள்ளவும், யாரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்யவும், பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும், நெறிமுறை அடிப்படையில் கூட்டாக முன்னேறவும் இலங்கை தயாராக உள்ளது என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.”
