கொழும்பில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக் கிண்ணப் போட்டியில், இந்திய அணி தனது பரம்பரை எதிரியான பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கான இடத்தைப் பிடித்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெறும் தொடர்ச்சியான 9ஆவது வெற்றியாகும்.
அரசியல் பதட்டங்கள் மற்றும் கடந்த கால மோதல்களின் பின்னணியில் இப்போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் நீடித்த போதிலும், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி போட்டி நிறைவுற்றது. நாணயச் சுழற்சியின் போது இரு அணியின் தலைவர்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை, போட்டி முடிவிலும் வீரர்களிடையே எந்தவித பரிமாற்றமும் இருக்கவில்லை.
இஷான் கிஷான் அதிரடி:
சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில், இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷான் 40 பந்துகளில் 77 ஓட்டங்களை விளாசி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்ட விகிதத்தைக் கட்டுப்படுத்தினாலும், இஷான் கிஷானின் அதிரடியால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா:
176 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா முதல் ஓவரில் ஒரு விக்கெட்டையும், ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தனர். உஸ்மான் கான் 44 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 114 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சம்பியனான இந்தியா சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் நமீபியாவை வீழ்த்தினால் மட்டுமே சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். அப்படி நிகழும் பட்சத்தில், அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
