தென்னிலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து 35 பேரை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதாகக் கிடைத்த அவசர அழைப்பினைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் உடனடியாக விரைந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர்.
மீட்கப்பட்டவர்களை காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்த விபத்து இலங்கை பிராந்திய கடற்பரப்பிற்கு வெளியே நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் தேவையான அனைத்து துரித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
