Headlines

பல மாவட்டங்களில் 50 மி.மீ-க்கும் அதிக மழை: வானிலை அவதானி நிலையம் எச்சரிக்கை!

கொழும்பு: நாட்டின் பல மாகாணங்களில் இன்று (13) மழை பெய்யக்கூடும் எனவும், சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய மழைப்பொழிவு விபரங்கள்: மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். குறிப்பாக ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை நேர இடியுடன் கூடிய மழை: நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இதன்போது சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பனிமூட்டமான காலநிலை: மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கான எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *