நடைபெற்று வரும் 2026 ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலைப் போட்டிகளிலிருந்து, 2021 ஆம் ஆண்டின் சம்பியனான அவுஸ்திரேலிய அணி உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (17) பல்லேகலவில் ‘குரூப் B’ பிரிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த போட்டி, இடைவிடாத மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
போட்டி கைவிடப்பட்டதால், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் ஜிம்பாப்வே அணியின் மொத்தப் புள்ளி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
அவுஸ்திரேலிய அணி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஓமானுக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், அவர்களால் அதிகபட்சமாக நான்கு புள்ளிகளை மட்டுமே பெற முடியும். எனவே, ஜிம்பாப்வேயின் ஐந்து புள்ளிகளை அவர்களால் எட்டிப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அவுஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியானது.
திங்கட்கிழமை கண்டியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தபோதே அவுஸ்திரேலியாவின் அடுத்த சுற்று வாய்ப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அப்போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்கவின் அதிரடிச் சதத்தின் (ஆட்டமிழக்காது 100) உதவியுடன் இலங்கை அணி வெற்றி பெற்று, சுப்பர் 8 சுற்றுக்கான தனது இடத்தை உறுதி செய்திருந்தது.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையிலேயே விளையாடியது. அவர்கள் ஜிம்பாப்வேயிடமும் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தனர். கொழும்பில் நடந்த தமது தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்திற்கு எதிராகப் பெற்ற 67 ஓட்டங்கள் வெற்றி மட்டுமே இத்தொடரில் அவர்களது ஒரே வெற்றியாகும்.
இதேவேளை, இந்த ‘குரூப் B’ பிரிவிலிருந்து ஓமான் மற்றும் அயர்லாந்து அணிகளும் ஏற்கனவே வெளியேறிவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
