(கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச தலைவராகப் பதவி வகித்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருந்தார். இந்தப் பயணத்திற்காக அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையான பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், முன்னாள் ஜனாதிபதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளைப் பரிசீலனை செய்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
