கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பாரிய திட்டம் இன்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த இத்திட்டத்தை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், ரயில் நிலையத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் என போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வசதிகள் என்ன?
இத்திட்டத்தின் கீழ், பயணிகளுக்கான புதிய மூன்று மாடி சேவை கட்டடம் ஒன்று அமைக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது. இதில் பின்வரும் வசதிகள் இடம்பெறவுள்ளன:
- தங்கும் வசதிகள் மற்றும் ஓய்வறைகள்
- தரமான உணவகங்கள்
- சுகாதார வசதிகள் (Sanitation systems)
- தகவல் மையம் (Information center)
- மருந்தகம் மற்றும் தபால் சேவை மையம்
நவீன மேம்பாலம் மற்றும் தொழில்நுட்பம்
ரயில் நிலையத்தின் தற்போதைய பயணிகள் மேம்பாலம் அகற்றப்பட்டு, மின்சாரப் படிகள் மற்றும் தானியங்கி எஸ்கலேட்டர்களுடன் கூடிய நவீன கட்டமைப்புடன் மாற்றப்படும். இது அனைத்து தளங்களுக்கும் (Platforms) இலகுவாகச் செல்வதை உறுதி செய்யும். இப்புதிய பாலம் கொம்பனித்தெரு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை மற்றும் மருதானை, பஸ்டியன் மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்படும். மேலும், பயணிகளின் நடமாட்டத்தைச் சீரமைக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய இ-கேட் (e-gate) அமைப்பும் நிறுவப்படவுள்ளது.
அத்துடன், முச்சக்கர வண்டிகள், டாக்ஸிகள் மற்றும் தனியார் கார்களைப் பாதுகாப்பாக நிறுத்தக்கூடிய வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து முனையம் (hub) ஒன்றும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
செலவு மற்றும் காலக்கெடு
இத்திட்டம் 15 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 2,162 மில்லியன் ஆகும். இதில் ரூ. 1,500 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கடனுதவியாகவும், மீதமுள்ள ரூ. 662 மில்லியன் இலங்கை அரசாங்கத்தாலும் நிதியளிக்கப்படவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
