Headlines

லெபனானில் ஊடகவியலாளர்கள் படுகொலை: ஈரானிய அமைச்சர் ஆவேசம்!

லெபனானின் ஜெஸைன் (Jezzine) நகரில் இஸ்ரேல் படைகள் நடத்திய திட்டமிட்ட தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் அல்-மனர் (Al Manar) தொலைக்காட்சியின் செய்தியாளர் அலி ஷூயிப் (Ali Shoeib) மற்றும் அல்-மயாதீன் (Al Mayadeen) தொலைக்காட்சியின் செய்தியாளர்களான பாத்திமா மற்றும் முகமது ஃபெடோனி ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, “இது ஊடகத் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு மட்டுமல்ல, உலக மனசாட்சிக்கான ஒரு எச்சரிக்கை மணி. உண்மையைச் சொல்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை இது” என்று சாடியுள்ளார்.

ஆனால், அலி ஷூயிப் ஊடகவியலாளர் என்ற போர்வையில் ஹிஸ்புல்லா அமைப்பில் பணியாற்றியவர் என இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து லெபனானில் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கிடையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கத்தார் நாட்டு செய்தி நிறுவனமான ‘அல்-அரபி’ (Al Araby) அலுவலகமும் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அலுவலகக் கட்டடம் மற்றும் தளவாடங்கள் பலத்த சேதமடைந்ததால், அங்கிருந்து நடைபெறும் நேரடி ஒளிபரப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தெஹ்ரான் வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடைந்த கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *