தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தூது சென்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவின. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பவன் கல்யாண் முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்துப் பேசிய அவர், “நான் விஜய்யைச் சந்தித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவருடன் நான் கூட்டணி குறித்துப் பேசினேன் என்பதில் உண்மையில்லை. இந்தத் தகவல் எப்படிப் பரவியது என்றே எனக்குத் தெரியவில்லை. சமீபகாலமாக எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆஃபர் மற்றும் வதந்திகள் விஜய்யின் தவெக கட்சிக்கு 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி போன்ற ஆஃபர்கள் வழங்கப்பட்டதாகவும், இதற்காக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு முக்கியத் தலைவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்தத் தலைவர் பவன் கல்யாண் தான் என பலரும் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது அவர் அதனை மறுத்துள்ளார்.
விஜய்க்கு NDA சரியான இடமா? தேசிய ஜனநாயகக் கூட்டணி விஜய்க்குச் சரியான இடமாக இருக்குமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த பவன் கல்யாண், “அது குறித்து எனக்குத் தெரியாது. கூட்டணி என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது மட்டுமல்ல, அது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவைப் பொறுத்தது,” எனப் பதிலளித்தார்.
தமிழக அரசியலில் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வுகள் உற்றுநோக்கப்படும் நிலையில், பவன் கல்யாணின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
