நியூயார்க்: தனது 25ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நோக்கில் களமிறங்கியுள்ள சேர்பிய வீரர் நோவக் ஜோக்கோவிச், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், அமெரிக்காவின் இளம் வீரர் லீனர் டியன்-ஐப் போராடி வீழ்த்தினார்.
முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றிய ஜோக்கோவிச், இரண்டாவது செட்டில் கடும் சவாலை எதிர்கொண்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அந்த செட்டை, டை-பிரேக்கரில் 7-6(3) எனக் கைப்பற்றியதே போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், மூன்றாவது செட்டையும் 6-2 என வென்று, போட்டியில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியாக 75 முதல் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை ஜோக்கோவிச் படைத்தார். போட்டியின்போது வலது காலில் ஏற்பட்ட கொப்புளம் காரணமாக அவர் சிரமப்பட்டாலும், அடுத்த போட்டிக்கு முன் ஓய்வெடுக்க இரண்டு நாட்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.