அமெரிக்க வரி தீர்மானம்: இந்தியா-பிரேசில் இடையிலான கூட்டாண்மை புதிய பாதையில்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் பிரேசிலுக்கு 50% வரி விதித்த நிலையில், இந்த முடிவு உலக வர்த்தகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று ஒரு மணி நேரம் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய விவாதங்களை மேற்கொண்டார்.

இந்த உரையாடலில், இந்தியா–பிரேசில் இடையிலான வர்த்தக உறவுகள், டிஜிட்டல் கட்டண முறைகள், வர்த்தக ஒத்துழைப்பை விரிவாக்கும் வழிகள் மற்றும் அமெரிக்க வரி நடவடிக்கையின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதலில், பிரேசிலின் ‘PIX’ எனும் டிஜிட்டல் கட்டண அமைப்பை, இந்தியாவின் ‘UPI’யுடன் இணைக்கும் முயற்சிகள் குறித்து இருதரப்பும் கலந்துரையாடின. இந்த இணைப்பு, இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிதாக்கும். இதற்கான தொழில்நுட்பக் குழுக்களை அமைப்பதற்கு, இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

அதேபோல், தற்போதைய $12 பில்லியன் அளவிலான இந்தியா–பிரேசில் வர்த்தகத்தை $20 பில்லியன் வரை உயர்த்தும் நோக்கத்துடன் இருதரப்பும் செயல்திட்டங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன.

இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இருநாடுகளும், உலக வர்த்தக அமைப்புகளில் உள்ள சில நாடுகளின் மோனோபலியை எதிர்க்கும் நோக்கில், பல்முக அணிகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை லுலா வலியுறுத்தினார். இது, BRICS அமைப்பின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் எனும் பார்வையும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வரி நடவடிக்கைகள், இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளை சீனா, ரஷ்யா, மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடன் நெருக்கமாக இணைவதற்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த நிலவரத்தில், பிரேசில் அதிபர் லுலா அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளார். அதற்கு முன், அக்டோபர் மாதத்தில் பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மின் இந்தியா வருகை தரவுள்ளார். இந்த சந்திப்புகள், இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *