வொஷிங்டன்: உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடன் வொஷிங்டனில் நேற்று (18) நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து, ரஷ்ய மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கு இடையே நேரடிச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மூன்று தலைவர்களும் பங்குகொள்ளும் முத்தரப்பு உச்சிமாநாட்டிற்கும் (trilateral summit) ஏற்பாடுகள் நடப்பதாக அவர் மேலும் கூறினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு “சிறப்பாக அமைந்தது” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களில் அமெரிக்காவும் பங்குகொள்ளும் என உறுதியளித்தார்.
இருப்பினும், இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, நேட்டோவில் சேரும் இலட்சியத்தையும், ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியாவை மீளப்பெறும் நம்பிக்கையையும் உக்ரைன் கைவிட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். இந்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.