கொழும்பு: அரச சேவையைத் திறமையானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவது தொடர்பான விசேட செயலமர்வு ஒன்று, அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக நேற்று (15) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
நாட்டின் டிஜிட்டல்மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் முதல் படியாக, செயற்கை நுண்ணறிவு குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “அரச சேவையின் செயல்திறனை அதிகரிக்கவும், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் AI தொழில்நுட்பம் அத்தியாவசியம்” என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமணாயக்க இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் ஜனாதிபதி செயலகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பத்து முக்கிய அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய இந்நிகழ்வில் பிரதான உரையாற்றினார்.