அறியாமை எனும் இருள் அகன்று ஞான ஒளி வீச வேண்டும் என்ற நம்பிக்கையுடன், உலகெங்கிலும் உள்ள இந்து மக்களால் பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் புனிதத் திருநாளான மகா சிவராத்திரி இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின்றது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக சங்கமத்தையும், சிவபெருமான் தனது தாண்டவ நடனத்தை நிகழ்த்தும் தருணத்தையும் நினைவுகூரும் முகமாக, இந்து பக்தர்கள் சிவபெருமானை வழிபடும் புனித நாளாக மகா சிவராத்திரி கருதப்படுகிறது. இது உலகிலும் மனித வாழ்விலும் உள்ள “அறியாமை இருளின்” மீதான வெற்றியைக் குறிக்கிறது என்றும் ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மனிதப் பிணைப்புகளையும் மதிக்கும் ஒரு ஒழுக்கமான மற்றும் இரக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் இத்தகைய மத மற்றும் கலாச்சார நிகழ்வுகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தான் உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி கூறினார்.
அகங்காரத்தை அகற்றி, இதயங்களிலும் மனங்களிலும் ஆன்மீக உணர்வை விழித்தெழச் செய்யும் மகா சிவராத்திரியின் புனிதச் சடங்குகள், நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு ஆகிய உயரிய நற்பண்புகளின்படி வாழ மக்களை அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மகா சிவராத்திரியின் ஆன்மீகச் செய்தியை ஒருவருக்கொருவர் இடையேயான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக தான் கருதுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாடு சமீபத்தில் மிகக் கடுமையான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றை எதிர்கொண்டதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி திஸாநாயக்க, அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தால் குறிக்கப்படும் ஒரு புதிய புதுப்பித்தல் சகாப்தத்தை நோக்கி, உறுதியான தீர்மானத்துடனும் கவனமான திட்டமிடலுடனும் தேசம் இப்போது முன்னேறி வருவதாகக் கூறினார்.
“மகா சிவராத்திரி விளக்குகள் நம் இதயங்களை ஒளிரச் செய்யும்போது, நாம் தேர்ந்தெடுத்த பாதையில் மேலும் தெளிவுபடுத்தவும் முன்னேறவும் அனைவரும் ஒன்றிணையுமாறு நான் அழைக்கிறேன். இலங்கையிலும் உலகெங்கிலும் இந்த புனித நாளைக் கொண்டாடும் இந்து பக்தர்களுக்கு அர்த்தமுள்ள மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் உயரிய அபிலாஷைகள் நிறைவேறவும் வாழ்த்துகிறேன்” என்று ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
