ஆரம்ப சுகாதார சேவைக்கு முன்னுரிமை, அரச ஊடகங்களுக்கு புதிய பொறுப்பு: ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொழும்பு: சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (19) நடைபெற்றது. இதன்போது, ஆரம்ப சுகாதார சேவைகளைப் பலப்படுத்துவதற்கும், சமூக மனப்பான்மையை உருவாக்குவதில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.


சுகாதாரத் துறைச் சீர்திருத்தங்கள்

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஆரம்ப சுகாதார சேவைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, 30,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற தற்போதைய விகிதத்தை, 10,000 பேருக்கு ஒரு நிலையம் என மேம்படுத்தும் திட்டத்தை மீளாய்வு செய்தார்.

ஆயுர்வேதத் துறை உட்பட மருத்துவ உபகரணக் கொள்வனவு நடைமுறைகளை நவீனமயமாக்கவும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபையின் (NMRA) வசதிகளை மேம்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார். தேசிய இரத்தப் பரிமாற்ற சேவைக்குத் தேவையான அத்தியாவசிய வாகனங்களை இந்த ஆண்டிற்குள்ளேயே பெற்றுக்கொள்ளுமாறும், ‘சுவசெரிய’ அம்பியூலன்ஸ் சேவையை 272 இலிருந்து 400 ஆக அதிகரிக்குமாறும் அவர் உத்தரவிட்டார். மேலும், அடுத்த ஆண்டு புதிய தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டம் வெளியிடப்படும் எனவும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.


ஊடகத்துறை மற்றும் பொதுவான அறிவுறுத்தல்கள்

சமூக மனப்பான்மையை உருவாக்குவது அரச ஊடகங்களின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கான ஒரு விரிவான திட்டத்தை வரவு செலவுத் திட்டத்துடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். தபால் சேவையை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை உரிய முறையில் பயன்படுத்தி மக்களுக்கு அதன் முழுமையான நன்மைகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *