(கன்பெரா) – 2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் பல்வேறு வகையான மோசடிகளால் 334 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகப் புதிய அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் இந்த இழப்புத் தொகை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான ‘Scamwatch’ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்டு முழுவதும் 200,000-க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் அதிக எண்ணிக்கையிலான மோசடிகள் மின்னஞ்சல் (Email) வழியாகவே நடந்துள்ளன. இது தொடர்பாக 84,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. மேலும், தொலைபேசி வழி மோசடிகள் தொடர்பாகச் சுமார் 38,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
நிதி இழப்பைப் பொறுத்தவரையில், முதலீட்டு மோசடிகளே (Investment Scams) முதலிடத்தில் உள்ளன. இதன் மூலம் மக்கள் 172 மில்லியன் டாலர்களை இழந்துள்ளனர். சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலமாக 158 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கூடுதலாக, ‘பிஷிங்’ (Phishing) மோசடிகளால் 31 மில்லியன் டாலர்களும், காதல் மோசடிகளால் (Romance Scams) 28.6 மில்லியன் டாலர்களும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்களை விட ஆண்களே அதிகளவில் மோசடிகளில் சிக்குவதாகவும், குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இத்தகைய மோசடி கும்பல்களால் அதிகம் குறிவைக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மோசடிகள் அரங்கேற்றப்படுவதால், தொழில்நுட்பம் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என Scamwatch எச்சரித்துள்ளது.
