டெல்லி: இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடை தொடரும் என மத்திய அரசு சமீபத்தில் தெளிவுபடுத்தியிருந்த நிலையில், அந்நிறுவனம் டெல்லி குர்கானில் உள்ள தனது அலுவலகத்திற்குப் புதிய பணியாளர்களைத் தேர்வு செய்யத் தொடங்கியிருப்பது பெரும் குழப்பத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
‘டிரஸ்ட் அண்ட் சேஃப்டி’ துறைக்கு வங்க மொழி பேசும் கன்டென்ட் மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு டிக்டாக் இந்தியா, ‘லிங்க்ட்இன்’ தளத்தில் விளம்பரம் செய்துள்ளது. ஆனால், “டிக்டாக் மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை,” என அரசு வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் வரி விதிப்புகளைத் தொடர்ந்து, சீனாவுடனான வர்த்தக உறவுகளை இந்தியா பலப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் மீதான தடை விரைவில் நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டிக்டாக் இந்தியாவின் இணையதளம் சமீபத்தில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததும் இந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.