கொழும்பு, நவம்பர் 12: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற வெடிப்புகளால் இலங்கைக்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புலனாய்வுப் பிரிவினரின் சுறுசுறுப்பான செயற்பாடு மற்றும் கண்காணிப்பு காரணமாக நாட்டின் பாதுகாப்பு ஸ்திரமாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் விஜேபால மேலும் கூறுகையில்: “தற்போது, அத்தகைய அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இலங்கையில் உள்ள புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். எமது பாதுகாப்புப் படையினர், குறிப்பாக முப்படையினரும் பொலிஸாரும் தேசிய பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை.”
பாதாள உலகக் குழுவினர் இலங்கைக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் தெளிவுபடுத்தினார்: “நான் அப்படி சொல்லவில்லை. சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் கடத்தலைக் கைவிட விரும்புவதாகவே நான் கூறினேன். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அந்தப் பாதையை விட்டு வெளியேற விரும்பினால், அது ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும்.”
