மும்பை: ஆசியக் கோப்பைத் தொடருக்காக இன்று (19) அறிவிக்கப்பட்ட இந்திய அணியில், தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டு, துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருப்பது இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் 759 ஓட்டங்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற சாய் சுதர்சனும், இங்கிலாந்துத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட வாஷிங்டன் சுந்தரும் நிச்சயம் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
“புதிய வீரர்களுக்கு வாய்ப்பில்லை” என அணி நிர்வாகம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் மட்டும் அணியில் சேர்க்கப்பட்டது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். “பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு நியாயம், தமிழக வீரர்களுக்கு ஒரு நியாயமா?” என்ற கோணத்தில் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.