கொழும்பு: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ உள்ளிட்ட ஆறு பாதாள உலகக் குழு உறுப்பினர்களும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இலங்கை CID, இந்தோனேசியப் பொலிஸார் மற்றும் இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஏழு நாள் கூட்டு நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக, இன்று (28) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.
“சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை,” எனத் தெரிவித்த அமைச்சர், “கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செழித்திருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன,” என்றார். “சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதே எமது இலக்கு,” எனவும் அவர் உறுதியளித்தார்.