Headlines

இன்று நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டி: கொழும்பில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் அமுல்!

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (15) இரவு 7:00 மணிக்கு நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டி தொடர்பில் விரிவான போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து முகாமைத்துவம், வாகன தரிப்பிட வசதிகள் மற்றும் மாற்று வீதிகள் தொடர்பில் அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ரசிகர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF), முப்படை மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து இந்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. இதற்காக சுமார் 2,000 பொலிஸ் உத்தியோகபத்திரர்களும், ஏறத்தாழ 600 போக்குவரத்துப் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக வழக்கமான சிசிடிவி (CCTV) கண்காணிப்பு, உடல் பரிசோதனைகள் மற்றும் வாகன சோதனைகள் நடத்தப்படும்.

பார்வையாளர்களுக்கான அறிவிப்புகள்:

  • மைதானத்தின் அனைத்து நுழைவாயில்களும் பிற்பகல் 3:00 மணிக்கு பொதுமக்களுக்காகத் திறக்கப்படும்.
  • அனைத்து ஆசனங்களுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஏற்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே அவர்களது ஆசனங்களில் அமர்ந்து போட்டியைப் பார்வையிட வாய்ப்பளிக்கப்படும்.
  • டிக்கெட் இல்லாத பொதுமக்கள் மைதானப் பகுதிகளில் கூடுவதைத் தவிர்த்து, வீடுகளில் இருந்தவாறு தொலைக்காட்சியில் அமைதியாகப் போட்டியை கண்டுகளிக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் ஒழுக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும், நல்லிணக்கத்துடனும் போட்டியை ரசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் நடத்தை:

  • பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிப் போத்தல்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல வேண்டாம் எனப் பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வளாகத்தினுள் போதுமான குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • மதுபோதையில் இருந்தாலோ, ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டாலோ அல்லது தகாத செயல்களில் ஈடுபட்டாலோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பெரிய பைகள், ஹெல்மெட்கள், ஜக்கெட்டுகள், மதுபானங்கள் மற்றும் இசைக்கருவிகள் மைதானத்திற்குள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ட்ரோன்கள், கத்திகள் போன்ற கூர்மையான பொருட்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

போக்குவத்து மற்றும் வாகன தரிப்பிட வசதிகள்:

கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்ட செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இல்லாமல் கெத்தாராம மாவத்தை சந்தி வழியாகவோ அல்லது வின்சன் பெரேரா மாவத்தையிலிருந்து பாபாபுல்லே பிளேஸ் சந்தி வரையோ எந்த வாகனமும் நுழைய அனுமதிக்கப்படாது. அனுமதிப்பத்திரம் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக பின்வரும் இடங்களில் வாகன தரிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன:

  • ஆர். பிரேமதாச மைதான வாகன தரிப்பிடம்
  • சதொச வாகன தரிப்பிட மைதானம்
  • செபஸ்டியன் எல வாகன தரிப்பிடம்
  • கிராண்ட்பாஸ் மெட்டி பூங்கா வாகன தரிப்பிடம்
  • கோவில வீதி வாகன தரிப்பிடம்
  • அப்பிள் வத்தை வாகன தரிப்பிடம்
  • அடி 100 வீதியின் இருபுறமும்

போக்குவரத்து கட்டுப்பாடுகள்:

பின்வரும் வீதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்:

வின்சன் பெரேரா மாவத்தை, கிராண்ட்பாஸ் வீதி, பாபாபுல்லே வீதி, செபஸ்டியன் எல வீதி, மெல்வத்தை பாலம் ஊடான மைதான நுழைவாயில், அடி 100 வீதி, டெம்பல் வீதி சந்தி ஊடான மைதான நுழைவாயில், மாளிகாவத்தை ஒழுங்கை, பக்க வீதி ஊடான மைதான நுழைவாயில் மற்றும் சத்தர்ம மாவத்தை-டெம்பல் வீதி (கெத்தாராம வீதி) சந்தி முதல் டெம்பல் வீதி வரை.

பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *