சென்னை: இந்தியாவில் கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தங்கம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சுப காரியங்கள் முதல் முதலீடு வரை தமிழர்களின் வாழ்வில் தங்கம் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், அதனை வாங்க முடியாமல் பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் தான், இயற்கை தங்கத்தைப் போலவே ஆய்வகத்தில் உருவாக்கப்படும் செயற்கைத் தங்கம் (Lab-grown Gold) குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
வைரத்தின் மீதான மோகம் குறைந்ததன் பின்னணி:
ஒரு காலத்தில் தங்கத்தை விட வைரத்திற்கு மவுசு அதிகமாக இருந்தது. வைரத்தை வாங்குவதே கடினம் என்ற சூழல் இருந்தது. ஆனால், எப்போது ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரம் (Lab-grown Diamonds) சந்தைக்கு வந்ததோ, அப்போதே வைரத்தின் மீதான மோகம் குறைய ஆரம்பித்துவிட்டது. இப்போது வைரம் வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டது.
தொடக்கத்தில் ஆய்வக வைரம் பார்ப்பதற்குத் தனித்து மோசமாகத் தெரிந்தது. ஆனால், தொழில்நுட்பம் வளர வளர இப்போது ஆய்வக வைரமும் இயற்கை வைரத்திற்கு இணையாக உள்ளது. சாதாரணமாக ஒருவரால் இரண்டிற்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவை இரண்டும் ஒரே போல உள்ளன.
ஆய்வகத் தங்கம் என்றால் என்ன?
ஆய்வகத் தங்கம் என்பது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படாது. மாறாக, ஆய்வகங்களில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் அணு அணுவாக உற்பத்தி செய்யப்படும் தங்கத்தைக் குறிக்கிறது. இது இயற்கை தங்கத்துடன் வேதியியல் ரீதியாக 100% ஒத்துப் போகும். அணு அமைப்பு, அடர்த்தி, உருகு நிலை, காரட் நிலைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.
இயற்கையில் எப்படி தங்கம் உருவாகுமோ, அதே போன்ற செயல்முறையை ஆய்வகத்தில் உருவாக்குவார்கள். இது கவரிங் போலப் பொய் தங்கம் இல்லை.. 100% உண்மையான தங்கம்!
தங்கத்தின் மதிப்பு குறையுமா?
ஆய்வகத் தங்கம் இப்போது ஆய்வக சோதனைகளிலேயே உள்ளது. செயற்கை வைரத்தைப் போல கமர்ஷியல் உற்பத்திக்கு இன்னும் வரவில்லை. அதற்குப் பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சோதனை முறையில் இருப்பதால், இது இயற்கை தங்கத்தை விட சற்று விலை அதிகமானதாகவே உள்ளது. மேலும், இதை உற்பத்தி செய்வதும் சற்றே சிக்கலான செயல்முறை.
அதேநேரம், இவை கமர்ஷியல் உற்பத்தியைத் தொடங்கினால் செயற்கை தங்கத்திற்கும் அசல் தங்கத்திற்கும் வேறுபாடே காட்ட முடியாது. தூய்மையிலும் இது இயற்கை தங்கத்தைப் போலவே 24 கேரட் (99.9% தூய்மை) வரை சுத்திகரிக்கப்படலாம். அதை 22 காரட் மற்றும் 18 கேரட் நகைகளாகவும் உருவாக்க முடியும். அடர்த்தி, வளைந்து கொடுக்கும் தன்மை, நீடித்த உழைப்பு, பளபளப்பு அனைத்தும் ஒரே மாதிரி இருக்கும்.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
தங்கம் என்பது எப்போதுமே பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. தங்கம் குறிப்பிட்ட அளவு மட்டுமே இயற்கையில் உள்ளது என்பதாலேயே அதன் மதிப்பு உச்சத்தில் உள்ளது. செயற்கை தங்கம் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டால் இயற்கை தங்கத்தின் மதிப்பு சரியலாம். ஆனால், இது நடக்க குறைந்தத பல ஆண்டுகள் ஆகும்.
எனவே, தங்க மார்க்கெட்டில் இப்போது ஏற்பட்டுள்ள சரிவுக்கு இது காரணம் அல்ல. அதற்கு சர்வதேச அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. செயற்கை தங்கம் வர பல ஆண்டுகள் ஆகும் என்றாலும் கூட, எதிர்காலத்தில் அது இயற்கை தங்கத்திற்கு ஒரு மாற்றாக அமைவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை!
