கொழும்பு: முறையான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், இலங்கை இந்த ஆண்டு 2.7 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வலுவைக் கொண்டுள்ளது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனது புதிய ‘ட்ரிலியம் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டல் திறப்பு விழாவில் நேற்று (17) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எனினும், ஹோட்டல் துறைக்குத் தேவையான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும், பயிற்றுவிப்பதற்கும் முறையான கட்டமைப்பு இல்லாதது ஒரு பெரும் சவாலாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். “கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (O/L) சித்தியடையத் தவறும் மாணவர்களை இத்துறையில் உள்வாங்கி, முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் வேலையின்மையைக் குறைத்து, சுற்றுலாத் துறையையும் பலப்படுத்த முடியும்” என அவர் யோசனை தெரிவித்தார்.
ஜூலை மாத இறுதிக்குள் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் 3 மில்லியன் என்ற இலக்கை நெருங்க முடியும் என்றார். பாதுகாப்பு மற்றும் தூய்மையின் அடிப்படையில் இலங்கை பல ஆசிய நாடுகளை விட முன்னிலையில் இருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது சாத்தியமே எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.