Headlines

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அரிய வாய்ப்பு: ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஐஎம்எஃப் பணிப்பாளர் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா (Kristalina Georgieva), ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை நேற்று (17) காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி, அனர்த்தத்திற்குப் பிந்தைய உதவிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான சீர்திருத்தத் திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உள்நாட்டுப் போர், ஆழிப்பேரலை (சுனாமி), பயங்கரவாதத் தாக்குதல்கள், பெருந்தொற்று மற்றும் ஆட்சிமுறை சவால்கள் என பல அதிர்ச்சிகளை இலங்கை எதிர்கொண்டுள்ளதாகவும், இது நீண்டகால வளர்சியைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் ஜோர்ஜியேவா இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான சீர்திருத்தங்களில் உறுதியாக இருப்பதால், அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும் நிலையான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கும் இலங்கைக்கு இப்போது ஒரு அரிய வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களை அடுத்து இலங்கைக்கு தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்த ஐஎம்எஃப் நிர்வாகப் பணிப்பாளர், பொருளாதாரம் மீண்டு வரும் வேளையில், அழிவுகரமான சூறாவளி பல பிராந்தியங்களைப் பாதித்துள்ளதாகக் கவலை வெளியிட்டார்.

பாதிக்கப்பட்ட கிராமிய சமூகங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பொருளாதார உத்வேகம் தேவை எனச் சுட்டிக்காட்டிய அவர், வீட்டுவசதி, நில மறுவாழ்வு மற்றும் மேம்பட்ட வாழ்வாதார வாய்ப்புகளுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவை வழங்குவதில் அரசாங்கத்தின் விரைவான செயற்பாட்டைப் பாராட்டிய அவர், மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியமும் 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அவசர நிதியுதவியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *