இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது 91 ஆவது வயதில் காலமானார்.
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (13) காலை காலமானதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் பயணம் மற்றும் பதவிகள் லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) தலைவராக செயற்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண, 1974 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் பிரவேசித்தார். தனது நீண்ட கால பொதுவாழ்வில் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சரவை அமைச்சர் மற்றும் மாகாண ஆளுநர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் (UPFA) தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்ற அவர், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சராகவும், பின்னர் விஞ்ஞான விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சராகவும் கடமையாற்றினார்.
கௌரவம் மற்றும் ஆளுநர் பதவி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில், 2017 ஆம் ஆண்டு அவருக்கு ‘வித்யா ஜோதி’ பட்டம் வழங்கப்பட்டது.
இறுதியாக, 2019 டிசம்பர் முதல் 2020 வரை வடமத்திய மாகாண ஆளுநராகவும் இவர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு இலங்கையின் இடதுசாரி அரசியலில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
