கொழும்பு: டிஸ்ரப்ட் ஏசியா 2025 மாநாட்டின் பிரதான நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (18) கொழும்பில் நடைபெற்றது. தெற்காசியாவின் வளர்ந்துவரும் புத்தாக்க மையமாக (innovation hub) இலங்கையை நிலைநிறுத்துவதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, “அடுத்த நான்கு ஆண்டுகளில், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதே எமது இலக்கு,” என்றார். டிஜிட்டல் ஏற்றுமதியை மும்மடங்காக்குவதும், டிஜிட்டல் திறமையாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதும் இதன் கீழ் அடங்கும்.
“அரசாங்கம் ஒரு தளமாகச் செயல்படும்” என்ற புதிய கொள்கையை அவர் அறிவித்தார். இதன்மூலம், தனியார் துறை புத்தாக்கத்தில் ஈடுபட, அரசாங்கத்தின் டிஜிட்டல் அமைப்புகள் API-கள் மூலம் திறந்துவிடப்படும். இந்தியாவின் பேடிஎம் (Paytm) நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா சிறப்புரையாற்றிய இந்நிகழ்வு, நாட்டின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.