கொழும்பு, டிசம்பர் 07: நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (06) இரவு 8.00 மணி நிலவரப்படி 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், 209 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு விபரங்கள்:
- மொத்த பாதிப்பு: நாட்டின் 25 மாவட்டங்களையும் இந்த அனர்த்தம் தாக்கியுள்ளது. இதில் 583,030 குடும்பங்களைச் சேர்ந்த 2,078,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: கம்பஹா (362,664), புத்தளம் (347,211) மற்றும் கொழும்பு (328,846) ஆகிய மாவட்டங்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
- இடம்பெயர்வு: பாதிக்கப்பட்டவர்களில் 29,874 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100,124 பேர் இன்னும் 990 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- வீடுகள் சேதம்: அனர்த்தம் காரணமாக 4,071 வீடுகள் முழுமையாகவும், 71,121 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
