இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மொத்தம் 84 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட 130 சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸாரே அதிகம்
இந்தக் கைது நடவடிக்கைகளில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் சிக்கியுள்ளனர். மொத்தம் 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பொலிஸ் சார்ஜன்ட்கள், 09 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 04 உப-பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 02 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் அடங்குவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், நீதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த 11 பேர், விவசாய மற்றும் பொதுச் சேவைத் திணைக்களத்தின் 5 அதிகாரிகள், 3 கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபைகளைச் சேர்ந்த 3 அதிகாரிகள் ஆகியோரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள்
சுற்றிவளைப்புகளைத் தவிர்த்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வைத்தியர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்கள் மற்றும் வழக்குகள்
2025 ஆம் ஆண்டில் 153 நபர்களுக்கு எதிராக 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 69 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த ஆண்டில் மட்டும் 8,409 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 569 புகார்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுச் சேவையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது அனைவரினதும் பொறுப்பு என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
