Headlines

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 27வது அமர்வு இன்று கொழும்பில்! முக்கிய உறவுகள் குறித்து பேச்சு.

கொழும்பு: இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 27வது அமர்வு இன்று (12) புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் இரு தரப்பிலிருந்தும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். நல்லாட்சி, மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் ஏனைய இருதரப்பு மற்றும் பிராந்திய முன்னுரிமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் பங்காளித்துவத்தை மீளாய்வு செய்யவும், மேலும் பலப்படுத்தவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டு ஆணைக்குழுவின் அமர்வுக்கு, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையின் (EEAS) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவ்லா பம்பலோனி (Paola Pampaloni) ஆகியோர் இணைத் தலைமை தாங்கவுள்ளனர்.

மேலும், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர், தற்போதுள்ள பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான கூட்டு அணுகுமுறைகள் மற்றும் உறுதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் சிரேஷ்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *