தெஹ்ரான்: ஈரானின் பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகரின் மேற்குப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
USGS வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த நிலநடுக்கம் பந்தர் அப்பாஸ் நகருக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
போர் பதற்றங்களுக்கு மத்தியில் நிலநடுக்கம்:
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பாரிய கூட்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்த பின்னணியிலேயே இந்த இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டுத் தாக்குதல்களில்தான் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
மேலும், ஈரானின் ஹார்மோஸ்கான் (Hormozgan) மாகாணத்தில் அமைந்துள்ள மினாப் சிறுமியர் ஆரம்பப் பள்ளி (Minab Girls’ Primary School) மீது சமீபத்தில் நடத்தப்பட்ட கொடூரமான வான்வழித் தாக்குதலில் 160 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
ஏற்கனவே தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள் மற்றும் கொடூரமான உயிரிழப்புகளால் நாடு பெரும் துயரத்தைச் சந்தித்து வரும் நிலையில், தற்போதைய இந்த நிலநடுக்கம் ஈரானிய மக்களிடையே மேலும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
