அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர், உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு புவிசார் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கக்கூடும் என இரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளனர்.
ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் இந்தச் சந்திப்பை உறுதிசெய்தார். “இரு தரப்பு நலனுக்காகவும் சில பிரதேசங்கள் பரிமாறிக்கொள்ளப்படும்” என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் இது தொடர்பான இணையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், குறைந்தபட்சம் ஒரு போர் நிறுத்தத்தையாவது எதிர்பார்ப்பதாகக் கூறினார். அதேவேளை, கிய்வ் “கவனத்துடன் ஆனால் நம்பிக்கையுடன்” இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், 1,000 கிலோமீட்டர் போர்முனையில் சண்டை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாஸ்கோவின் நேர்மை மீது சந்தேகம் இருப்பதாக உக்ரைனிய தளபதிகள் தெரிவித்தனர். “அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது. அவர்களைத் தோற்கடிப்பதே ஒரே வழி,” என்று ட்ரோன் பிரிவு தளபதி ஒருவர் கூறினார். தெற்கு முனையில் உள்ள ஒரு தளபதி, “நாங்கள் எங்கள் நிலத்தில் இருக்கிறோம், எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே எங்கள் நிலையில் உறுதியாக நிற்போம்,” என்று சூளுரைத்தார்.