கொழும்பு: உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுத்திருந்த வாழ்த்துச் செய்திக்கு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவில், “இலங்கையுடனான நட்புறவையும் ஒத்துழைப்பையும் உக்ரைன் மதிக்கிறது. பரஸ்பர மரியாதை மற்றும் சமாதானம், சுபீட்சம் மீதான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் அடிப்படையில் இந்த உறவுகள் அமைந்துள்ளன,” எனக் குறிப்பிட்டுள்ளார். “எமது உறவுகள் மேலும் வளர்ச்சியடைவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளன,” எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில், “உக்ரைன் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் துன்பங்கள் விரைவில் தீர்க்கப்பட்டு, நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும், ஸ்திரத்தன்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என நான் மனதார விரும்புகிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.