அலாஸ்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற சந்திப்பு நேற்று (15) அலாஸ்காவில் நடைபெற்றது. சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த சிநேகபூர்வ சந்திப்பிற்குப் பிறகு, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பிறகு புடின், இரு தரப்பிற்கும் இடையே ஒரு “புரிதல்” ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாலும், ட்ரம்ப் அதனை மறுத்துள்ளார். பேச்சுவார்த்தையில் பல விடயங்களில் உடன்பாடு காணப்பட்டாலும், சிலவற்றில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றார். இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதியின் வாகனமான ‘தி பீஸ்ட்டில்’ இருவரும் ஒன்றாகப் பயணித்தது போன்ற சிநேகபூர்வமான வரவேற்பு, நட்பு நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் சேர்க்கப்படாத நிலையில், தங்களைக் கலந்தாலோசிக்காமல் ஒரு பாதகமான ஒப்பந்தம் ஏற்படலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். இது குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “அமெரிக்காவிடமிருந்து ஒரு வலுவான நிலைப்பாட்டை” எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.
சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுக்கு விரைவில் விளக்கமளிக்க உள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.