கொழும்பு: ஜூலை மாதத்தில் மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, நாட்டின் மாதாந்த நுகர்வோர் விலைச் சுட்டெண் 0.2 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
எவ்வாறாயினும், வருடாந்த அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் 0.7 சதவீதமாகச் சற்று அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாதாந்த அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலைகள் 1.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக, மரக்கறிகள், தேங்காய், பச்சை மீன், அரிசி, முட்டை மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் குறைந்தன. அதேசமயம், எரிபொருள், மின்சாரம் மற்றும் வீட்டு வாடகை அதிகரிப்பு காரணமாக உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 0.8 சதவீதம் அதிகரித்தன.
தற்போதைய பணவீக்கமானது குறைவாகக் காணப்பட்டாலும், 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அது 5.0% என்ற மத்திய வங்கியின் நடுத்தர கால இலக்கை நோக்கி படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
