நாடு எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைந்துகொள்வதற்கு வலுவான மனித வளம் அவசியம் எனவும், பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்று (12) மேற்கொண்ட கல்விச் சுற்றுப்பயணத்தின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கு விஜயம் பெலியத்த ருஹுணு விஜயபா தேசிய பாடசாலை மற்றும் அதன் ஆரம்பப் பிரிவுக்கு விஜயம் செய்த பிரதமர், 2026 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வேலைப் புத்தகங்களை பார்வையிட்டார். அத்துடன், பாடத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் வகுப்பறை நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இதன்போது ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், நாகரீகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை அரசாங்கம் மதிப்பதாகத் தெரிவித்தார்.
ஆசிரியர் தொழில்சார் மேம்பாடு ஆசிரியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்கும் ‘கல்விப் பேரவை’ (Education Council) ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாடசாலைகளுக்கு இடையிலான உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
வீரக்கெட்டிய மற்றும் லுணம பாடசாலைகள் வீரக்கெட்டிய ராஜபக்ஷ ஆரம்பப் பாடசாலைக்குச் சென்ற பிரதமர், அங்கு முதலாம் தர வகுப்பறைகளில் முன்னெடுக்கப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவதானித்ததுடன், மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
பின்னர் வீரக்கெட்டிய மத்திய கல்லூரி ஆசிரியர்களைச் சந்தித்த அவர், உயர்தர வகுப்புகளை நடத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் உயர்தர மாணவர்களைப் பாடசாலை அமைப்பிற்குள் தக்கவைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
ஹம்பாந்தோட்டை லுணம துடுகெமுனு மகா வித்தியாலயத்திற்குச் சென்ற பிரதமர், அங்கு உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் குறித்து கவனம் செலுத்தினார். பாடசாலை நிர்வாகம் முறையான திட்டமிடல் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், எதிர்வரும் சீர்திருத்த முயற்சிகளில் வசதிகள் நிறைந்த பாடசாலைகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக நைகல ராஜமகா விகாரைக்குச் சென்ற பிரதமர், விகாராதிபதி வணக்கத்துக்குரிய வக்கமுல்லே உதித தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
