கொழும்பு, பிப்ரவரி 7: பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தை எதிர்வரும் பிப்ரவரி 17 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்து, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
இந்தச் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணாக அமையவில்லை என்றும், இதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவித்த அவர், அரசியலமைப்பின் 121(1) ஆவது உறுப்புரையின் கீழ் இந்த சட்டமூலம் பரிசீலிக்கப்பட்டதாகவும், இது அரசியலமைப்பு விதிகளுக்கு முழுமையாகப் பொருந்திப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற ஓய்வூதியங்களை ஒழிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி நிறைவு செய்தது.
இந்த சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.
அதன்படி, இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மக்கள் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான இந்தச் சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கலாநிதி ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த ஜனவரி 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தத் திகதியிலிருந்து சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி மனுக்களை சமர்ப்பிக்க 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும், 512 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமைகள் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
