ஜம்மு காஷ்மீர்: கடந்த மே மாதம் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக, ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் பாகிஸ்தான் இராணுவம் நேற்று இரவு அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளதால், எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தானில் இருந்து நபர் ஒருவர் ஊடுருவ முயற்சித்துள்ளார். அவரைத் தடுத்தபோது, பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ஊடுருவலுக்கு உதவியுள்ளனர்.
இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையின் போது, மோசமான வானிலையைப் பயன்படுத்தி ஊடுருவ முயன்றவர் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்குத் தப்பிச் சென்றார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இந்திய வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு நடந்துள்ள இந்தச் சம்பவம், இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.