Headlines

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க இலங்கை விருப்பம்: வெளிவிவகார அமைச்சர்

தற்போதைய காலப்பகுதி நிறைவடைந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பொதுவான முன்னுரிமை திட்டத்தின் (GSP) வர்த்தக சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடருக்கு இணைத்தலைமை தாங்குவதற்காக இலங்கை வந்துள்ள, ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் (EEAS) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவ்லா பம்பலோனியுடனான சந்திப்பின் போதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது X தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP சலுகைக்கு ஆழ்ந்த பாராட்டைத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இது இன்றியமையாததாக உள்ளதென சுட்டிக்காட்டினார். மேலும், தற்போதைய சுழற்சி முடிவடையும் போது இச்சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிக்க நாட்டின் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்து செய்தல், நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் (OSA) திருத்தங்கள் மற்றும் சுயாதீன தேசிய நிறுவனங்களை வலுப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய சட்ட சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கு தெளிவுபடுத்தினார்.

மேலும், ‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்த இலங்கையின் மீட்பு முயற்சிகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், மீட்புச் செயற்பாடுகளின் போது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றியையும் தெரிவித்தார்.

கூடுதலாக, இரு தரப்பும் பூகோள மற்றும் பிராந்திய புவிசார் அரசியல் சவால்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் பலதரப்பு அமைப்பின் கோட்பாடுகளுக்கான தமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

“இந்த ஈடுபாடானது, பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் ஒத்துழைப்பான எதிர்காலத்திற்கான பார்வை ஆகியவற்றில் கட்டியெழுப்பப்பட்ட இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான மற்றுமொரு படியாகும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *