கொழும்பு: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், “கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தமைக்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (27) கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமான ஒரு தீவு. அந்த நிலையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது,” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் இந்தக் கருத்தைத் தெரிவித்த அவர், “தென்னிந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குகளைப் பெறுவதற்காகத் தேர்தல் மேடைகளில் இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும். இது முதல் முறையல்ல. தேர்தல் மேடைப் பேச்சுகளால் எதுவும் மாறப்போவதில்லை,” என்றார்.
“நடிகர் விஜய்யின் கருத்து குறித்து அதிக கவனம் செலுத்தத் தேவையில்லை,” எனக் குறிப்பிட்ட அமைச்சர், “இந்திய மத்திய அரசோ, அல்லது அதன் இராஜதந்திரிகளோ இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, கச்சத்தீவின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது,” எனவும் அவர் மேலும் உறுதியளித்தார்.