கொழும்பு: கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார். மேலும், ரம்புக்கனை – கலகெதர அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கட்டுபெத்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “கடந்த 10 மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டு, இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார். கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலா வருமானம், வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமான நிலையை அடைந்துள்ளதால், பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுக்க முடிவதாகவும் அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.