கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியுடன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார். பிராந்திய விவகாரங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
கத்தார் மற்றும் பரந்த பிராந்தியத்தைப் பாதிக்கும் வகையிலான ஈரானின் தற்போதைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட ஜனாதிபதி திஸாநாயக்க, கத்தார் அரசுக்கு இலங்கையின் ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்தினார்.
கத்தாரில் உள்ள தற்போதைய நிலைமைகள், குறிப்பாக அங்கு வசிக்கும் இலங்கைச் சமூகத்தின் நல்வாழ்வு குறித்து கத்தார் அமீர் இலங்கை ஜனாதிபதிக்கு உறுதியளித்தார். அத்துடன், கத்தார் மண்ணில் வாழும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான தமது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அதிகரித்துவரும் இராணுவப் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகள், விநியோகச் சங்கிலிகளில் அவை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் உள்ளிட்ட பரந்த பிராந்திய சவால்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேச ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான எரிசக்தி விநியோகத்தைப் பேணுவதற்கான தமது கடப்பாட்டை வலியுறுத்திய கத்தார் அமீர், நம்பகமான எரிசக்திப் பங்காளியாக கத்தாரின் பங்களிப்பை இதன்போது முன்னிலைப்படுத்தினார்.
பதட்டங்களைத் தணிக்கவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பிராந்திய மற்றும் சர்வதேச முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கான இராஜதந்திர தீர்வுகளுக்கும் இரு தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
