சென்னை: ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அதன் இயக்குனர் நாக் அஸ்வின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன.
சமீபத்தில் நாக் அஸ்வின், ரஜினிகாந்தைச் சந்தித்துக் கதை ஒன்றைக் கூறியதாகவும், அது ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம், ‘கல்கி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்குமா அல்லது ஒரு புதிய தனிப் படமாக இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
நாக் அஸ்வின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்தால், அது நிச்சயம் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். ‘கூலி’ படத்திற்குப் பிறகு, ரஜினி ஒரு தரமான வெற்றிப் படத்தைக் கொடுக்க இந்தக்கூட்டணி சரியாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ நிறைவடைந்த பின்னரே, அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.