காஸா: இஸ்ரேல், காஸா நகர் மீது நடத்திவரும் தாக்குதல்களில், கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று (24) மாத்திரம் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 51 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸா நகரின் ஸெய்தூன் மற்றும் சப்ரா பகுதிகளில் இந்த அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் எனவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாதவாறு இஸ்ரேல் பாதைகளைத் தடுத்துள்ளதாகவும் அப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
நேற்றைய தினம் கொல்லப்பட்ட 51 பேரில், உதவிப் பொருட்களைப் பெறச் சென்ற 24 பேரும் அடங்குவர். மேலும், பட்டினியால் மேலும் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, போரின் ஆரம்பம் முதல் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 289 ஆக (அதில் 115 குழந்தைகள்) உயர்ந்துள்ளது. காஸாவில் மக்கள் “அனைத்து வடிவங்களிலும் நரகத்தை” அனுபவித்து வருவதாக ஐ.நா. அதிகாரி பிலிப் லெசாரினி வேதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் காஸா நகரை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துவரும் நிலையில், “பாதுகாப்பான இடம் எங்கும் இல்லை” எனக் கூறி, மக்களைத் தமது இடங்களிலேயே இருக்குமாறு காஸா உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.