காஸா நகருக்குள் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் தீவிரம்: ஒரே நாளில் 64 பலஸ்தீனர்கள் பலி!

காஸா: இஸ்ரேலிய இராணுவம் காஸா நகருக்குள் தனது தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று (26) செவ்வாய்க்கிழமை மாத்திரம், இஸ்ரேலியத் தாக்குதல்களில் 64 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஸாவின் ஸெய்தூன் மற்றும் சப்ரா பகுதிகளில், கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் 1,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்புப் பிரிவு மதிப்பிட்டுள்ளது. காஸா நகரைக் கைப்பற்றி, அங்குள்ள சுமார் 1 மில்லியன் மக்களைத் தெற்கு நோக்கி இடம்பெயரச் செய்யும் நோக்கில் இஸ்ரேல் செயற்படுவதாகக் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் கொல்லப்பட்டவர்களில், சந்தை ஒன்றில் கொல்லப்பட்ட 5 பேரும், உதவிப் பொருட்களைப் பெறச் சென்ற 13 பேரும் அடங்குவர். மேலும், பட்டினியால் மேலும் 3 பேர் உயிரிழந்ததையடுத்து, போரின் ஆரம்பம் முதல் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை நாசர் வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட “இரட்டைத் தாக்குதலில்” (double-tap attack) 5 ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இஸ்ரேல் இதனை “ஒரு துயரமான விபத்து” எனக் கூறியுள்ள போதிலும், இது ஒரு போர்க்குற்றம் என சட்ட வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *